கவிதைகள்

டீத்தூள் தீர்ந்துவிட்ட காலைகளை

விழிக்காமல் கழிக்கிறேன்.

பூங்கமகமப்போடு கடக்கும் பெண்ணைத்

திரும்பிப் பார்க்கக் கூடாதென

மனசைப் பழக்குகிறேன்.

கவிதை யோசித்தபடி

தலைக்குப் பவுடரும்

முகத்துக்கு எண்ணெய்யும்

போட்டுக்கொள்கிறேன்.

என் காதலிக்கு நானே

கல்யாணம் செய்விக்கிறேன்.

அந்தியின் சாயத்தை அள்ளி வழித்து

வீட்டுச் சுவருக்குப் பூசுகிறேன்.

வாய்பாடு வாங்கக் காசுகேட்கும்

தம்பியை அடிக்கிறேன்.

சற்றுமுன் தின்ற ஓணானின்

காறல் நாற்றமடிக்கும் பூனையைக்

கொஞ்சுகிறேன்.

அடகு வைத்த சைக்கிளை மீட்பதாய்

அறுந்துவிட்ட செருப்பைத் தைப்பதாய்

எப்போதாவது கனாக் காண்கிறேன்.

- கவிஞர் மகுடேசுவரன்

ஒற்றைக்கால் தவம் கலைந்தது.

காட்சியளித்த கடவுள் கவ்வப்பட்டார் !

குளக்கரையில் கொக்கு !

- கவிஞர் மகுடேசுவரன்

இவ்வெய்யில்

பழுப்பிலையைத் தீண்டும்

அதே விரலால்தான்

தளிரிலையைத் தீண்டுகிறது.

- கவிஞர் மகுடேசுவரன்

"நீ எக்கேடு கெட்டால்

எனக்கென்ன..." என்னும்

வாழ்நாள் துணிவுதான்

காதலர் பிரிதல்.

- கவிஞர் மகுடேசுவரன்